இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்? 2026/06/15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
தம்புள்ளையில் தற்சமயம் நடைபெற்ற வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில், இலங்கை ‘ஏ’ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் துடுப்பாட்டம் செய்யத் தயாராவதற்கு முன்பும், சேஸிங்கின் முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பும், அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை ஸ்கோர்போர்ட்டில் 10/0 எனக் காட்டப்பட்டது.
சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன், இந்தியா ‘ஏ’ அணி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் 265 ஓட்டங்கள் என்ற சவாலான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.
இருப்பினும், போட்டியின் முக்கிய பேசுபொருளாக அமைந்தது இலங்கை ‘ஏ’ அணியின் இன்னிங்ஸின் போதுதான். அப்போது, அந்த அணி ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் 10 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக இலங்கை ‘ஏ’ அணிக்கு ஏன் 10 ஓட்டங்கள் வழங்கப்பட்டது?
இந்தியா ‘ஏ’ அணி வீரர்கள் தங்களது இன்னிங்ஸின் போது, ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மீண்டும் ஓடியதற்காக இந்த ஓட்டம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதல் எச்சரிக்கை 33 ஆவது ஓவரில் வந்தது; அப்போது ஆல்-ரவுண்டர் அனுகுல் ராய் ஆடுகளத்தின் நடுவில் ஓடியதற்காகக் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
இரண்டு ஓவர்கள் கழித்து, 35 ஆவது ஓவரில், விப்ராஜ் நிகம் அதே தவறைச் செய்து, நடுவரிடமிருந்து இரண்டாவது மற்றும் இறுதி எச்சரிக்கையைப் பெற்றார்.
ஐசிசி விதிகளின்படி, விதிமீறலுக்காக, களத்தில் இருந்த இலங்கை ‘ஏ’ அணிக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டது.
37 ஆவது ஓவரில் நிகம் மீண்டும் அதே விதிமீறலைச் செய்ததால், மற்றொரு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டது.
இதன் விளைவாக, இலங்கை ‘ஏ’ அணி ஏற்கனவே 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தங்களது சேஸிங்கைத் தொடங்கியது.
மேலும் அவர்களது இன்னிங்ஸின் முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே ஸ்கோர்போர்ட்டில் 10/0 என்று காட்டியது.
ஐசிசி கிரிக்கெட் விதிகளின்படி, துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வேண்டுமென்றோ அல்லது கவனக்குறைவாகவோ ஓட அனுமதிக்கப்படுவதில்லை.
இவ்வாறான நடவடிக்கை ஆடுகளத்தின் நிலையை கணிசமாகப் பாதிக்கக்கூடும் என்பதாலும் இந்த விதி உள்ளது.
அத்தகைய விதிமீறலுக்கு நடுவர் முதல் எச்சரிக்கை விடுக்கிறார்.
துடுப்பாட்டம் செய்யும் அணி அடுத்தடுத்து செய்யும் எந்தவொரு விதிமீறலுக்கும் ஐந்து ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும்.

Comments
Post a Comment